அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ்' :இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 27ல் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கான பயிற்சி முகாம் புனே, போபால், சோனேபட் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. இங்கு மோசமான உணவு வழங்கப்படுவதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து பயிற்சி முகாம்களின் உண்மை நிலையை கண்டறிய மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் சார்பில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இதில் இடம் பெற்றுள்ள முன்னாள் வீரர் கஜான் சிங், அரியானாவின் சோனேபட் பயிற்சி முகாமில் திடீரென சோதனை மேற்கொண்டார். இங்கு தான் பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு அழுகிய பழத்தில் "ஜூஸ்' கொடுப்பது சோதனையில் அம்பலமானது.
இது குறித்து 1986ல் நடந்த ஆசிய விளையாட்டு நீச்சலில் வெள்ளி வென்ற கஜான் சிங் கூறியது: பயிற்சி முகாமில் பங்கேற்கும் வீரர்களுக்கு அழுகிய பழத்தில் "ஜூஸ்' கொடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். "கிச்சன்' மிகவும் அசுத்தமாக இருந்தது. உணவுப் பொருட்களின் தரத்தை மேற்பார்வையிட உணவு முறை நிபுணரோ அல்லது மருத்துவ நிபுணரோ இல்லை. வீரரின் உணவுச் செலவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 675 வழங்க வேண்டுமென மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், சத்தான உணவு எதுவும் வழங்கப்படுவது கிடையாது.
இக்குறைகளை சுஷில் குமார் போன்ற முன்னணி வீரர் கூட எடுத்துச் சொல்ல தயங்கியது வியப்பு அளித்தது. குறை சொன்னால், அடுத்த நிமிடமே சம்பந்தப்பட்ட வீரர் பயிற்சி முகாமில் இருந்து வெளியேற்றப்படுவர். இந்த பயம் காரணமாகவே எல்லாவற்றையும் மூடி மறைக்கின்றனர்.
நான் ஆய்வு செய்த போது, "மெனு'வில் குறிப்பிடப்பட்டிருந்த உணவுகள் எதுவுமே பரிமாறப்படவில்லை. இந்த முகாமிற்கான சமையல்காரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என அறிக்கையில், பரிந்துரைத்துள்ளேன்.இவ்வாறு கஜான் சிங் கூறினார்.சமையல் ஒப்பந்தம் பெற்றவர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இது குறித்து சோனேபட் பயிற்சி முகாமின் பொறுப்பாளர் சஞ்சீவ் சர்மா கூறுகையில்,""சமையல் ஒப்பந்தக்காரர் ஜெயினுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இதில் சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்க முடியும். நினைத்த நேரத்தில் ஒப்பந்தக்காரரை வெளியேற்ற முடியாது,''என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக